போராட்டத்தின் தொடக்கத்தில் கொளத்தூர் மணி பேசுகையில், போரில் இறந்த போராளிகளை சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிராக நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியும் தொடர்ந்து இனவெறியுடன் தமிழர்களைக் கொன்றுவரும் இலங்கை அரசைக் கண்டித்து தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துகிறோம் என்றார்.
சிறிலங்காவின் இராணுவ இலக்குகளையும் பொருளாதார இலக்குகளையும் மட்டுமே தாக்குகிற தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சிங்கள இனவெறி அரசு சொல்ல அதனை ஏற்று பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருக்கின்றன.
ஆனால் பல நாடுகளின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்ட அமைதிப் பேச்சில் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக பள்ளிகள், குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் மீது குண்டுகளை வீசி அப்பாவிப் பொதுமக்களை, செய்தியாளர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை, மாணவர்களை படுகொலை செய்தும் இறுதியாக அமைதிப் பேச்சுக்கு தலைமையேற்று நடத்தி வந்த அரசியல் பிரிவு தலைவரையே குறி பார்த்து குண்டுவீசியும் கொன்றிருக்கிற சிங்கள அரசே உண்மையான பயங்கரவாதி என்பதைப் புரிந்து கொண்டு, சிங்கள அரசுக்கு ஆயுதம், பயிற்சி உள்ளிட்ட எந்த ஒரு உதவியையும் இந்திய அரசு செய்யக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழ் இனத்துக்கு பாதுகாப்பாக நின்று உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ள சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விடுதலைப் போராட்ட அமைப்பாக அங்கீகரித்து, இந்திய அரசுக்கோ இந்திய இறையாண்மைக்கோ எதிராக ஒருபோதும் செயல்படாத விடுதலைப் புலிகள் மீது தேவையற்று விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று கொளத்தூர் மணி கூறினார்.
இதைத் தொடர்ந்து கொளத்தூர் மணி, தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் திருச்சி சௌந்தர்ராஜன், தமிழ் மண் பதிப்பகம் இளவழகன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பச்சைமலை, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் அன்பு தென்னரசு, பெரியார் தி.க. துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.