மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த ம.திமு.க. பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக வைகோ உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பூவிருந்தவல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் பிணைய விடுதலை கேட்டு வைகோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, வைகோவின் கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு பிணைய விடுதலை வழங்கினார். இதை தொடர்ந்து கடவுச் சீட்டை வைகோ நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த அக்டோபர் 18ஆம் தேதி வந்தபோது, நவம்பர் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் வைகோ ஆஜராகி கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி கூறி இருந்தார்.
இதையடுத்து வைகோ இன்று பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆவடி தியாகராஜன் மூர்த்தி முன்பு ஆஜராகி கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டார்.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், அயல்நாடு செல்லஇருப்பதால் கடவுச் சீட்டை பெறுவதற்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜரானேன். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றார்.