''ரேஷன் பொருட்கள் கடத்தலைத் தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகக் கூட்ட அரங்கில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தில் தொடரப்பட்ட வழக்குகள், கடத்தல் தடுப்புப் பணியில் கைப்பற்றப்பட்ட பொது விநியோகத் திட்ட அரிசி, மண்எண்ணெய், டீசல் போன்றவை பற்றி தொடரப்பட்ட வழக்குகள், தண்டனையுடன் முடிவு செய்யப்படும் வழக்குகள் பற்றி விரிவாக ஆய்வு செய்தார்.
சில குறைபாடுகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய குறைபாடுகள் ஏற்படாமல் வழக்குகள் நடத்த வேண்டுமென்றும். உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவில், கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய நுண்ணறிவு விவரங்கள் திரட்டப்பட வேண்டுமென்றும், அதன் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், பிற மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களில் அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டுமென்றும், அடுத்த நான்கு மாதங்களில் கடத்தல் தடுப்புப் பணியை தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்றும், சென்ற ஆண்டைக் காட்டிலும் மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென்றும் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.