லஞ்ச வழக்கில் துணை தாசில்தார் கைது

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (13:06 IST)
விவசாயிடம் பட்டா மாறுதலில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கி கைதான ஈரோடு துணை தாசில்தார் மற்றும் உதவியாளர் இருவரையும் மாவட்ட ஆட்சியர் தற்காலிக பதவி நீக்கம் செய்தார்.

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளார். சித்தோடு வாசவி கல்லூரி அருகே இவரது குடும்பத்தினர் பெயரில் 17.5 சென்ட் நிலம் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கத்தில் எடுத்துள்ளனர். இதனால் நெடுஞ்சாலைத் துறையிடம் நிலத்தை ஒப்படைக்க முடிவு செய்தார் முத்துகிருஷ்ணன்.

இதற்காக அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஈரோடு தாலுகா அலுவலத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். பெயர் மாற்றம் செய்ய துணை தாசில்தார் (கோட்டம் மூன்று) ராஜ்குமார் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து முத்துகிருஷ்ணனிடம் பேரம் நடந்தது. முடிவில் ரூ. 2 ஆயிரம் தர முத்துகிருஷ்ணன் சம்மதித்தார். இதுபற்றி முத்துகிருஷ்ணன், லஞ்ச ஒழிப்புத்துறை காவ‌ல்துறை‌யிட‌ம் புகார் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறை காவ‌ல்துறை‌யின‌ர் கொடுத்த பணத்துடன் முத்துகிருஷ்ணன் ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். துணை தாசில்தார் ராஜ்குமாரிடம் பணத்தை கொடுத்தார். அவர், பணத்தை உதவியாளர் ஈஸ்வரனிடம் கொடுக்க கூறினார்.

முத்துகிருஷ்ணன் பணத்தை கொடுத்ததும் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் கண்ணம்மா, ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் அதிரடியாக தாலுகா அலுவலகத்துக்குள் புகுந்து ஈஸ்வரனை கையும் களவுமாக பிடித்தனர்.

துணை தாசில்தார் ராஜ்குமார், உதவியாளர் ஈஸ்வரன் ஆகியோரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். சோதனையில், துணை தாசில்தார் மேஜை ட்ராயரில் கணக்கில் காட்டப்படாத ரூ. 20 ஆயிரம் பணத்தையும், லஞ்ச ஒழிப்புத் துறை காவ‌ல்துறை‌யினர் கொடுத்தனுப்பிய ரூ. 2 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றினர்.

லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக துணைதாசில்தார் ராஜ்குமார், உதவியாளர் ஈஸ்வரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். திண்டலில் உள்ள ராஜ்குமார் வீட்டிலும், மரப்பாலத்தில் உள்ள ஈஸ்வரன் வீட்டிலும் சோதனை நடந்தது.
இவர்கள் இருவரையும் தற்காலிக பதவிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன் உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்