தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவிற்கு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய கருணாநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதிக்கு எப்போதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு பிரிக்க முடியாத, அசைக்க முடியாத பிணைப்பு இருந்து வருவதை அனைவரும் நன்கு அறிவார்கள். அதை நிரூபிக்கும் வகையில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு, இந்திய அரசமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்து கொண்ட முதலமைச்சர் கருணாநிதி, தமிழக அரசின் செய்தி துறை மூலமாக அதிகாரப்பூர்வமாக கவிதை வடிவில் இரங்கல் வெளியிட்டிருந்தார்.
இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து மத்திய அரசு உடனடியாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதற்கு கருணாநிதி எனது உடலில் தமிழ் ரத்தம் ஓடுகிறது என்று கூறியிருந்தார். தான் செய்த தேச விரோத செயலுக்கு தமிழன் பெயரை கருணாநிதி இழுக்கிறார்.
எனது உடலிலும் தமிழ் ரத்தம்தான் ஓடுகிறது. ஆனால் கருணாநிதிக்கு ஓடுகிறமாதிரி தேசத் துரோக ரத்தம் எனக்கு ஓடவில்லை. நான் மைசூரில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில்தான் பிறந்தேன். எனது தாய்மொழி தமிழ்தான். இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என்று ஏற்றுகொள்ளும் போது, இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள மைசூரில் பிறந்த என்னையும் தமிழர் என ஏற்று கொள்ள வேண்டும். நான் கர்நாடகத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சுத்த தமிழச்சி.
இலங்கை தமிழர்கள் மீது எனக்கும், எப்போதும் பரிவும், பாசமும் உண்டு. அவர்கள் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமும், எல்லோருடைய விருப்பமுமாகும். ஆனால் கருணாநிதி கடந்த 2 ஆண்டு காலமாக இலங்கை தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்து கொண்டிருந்த போது வருத்தம் தெரிவிக்காமல், தமிழ் செல்வன் மறைவுக்கு மட்டும் இரங்கல் தெரிவித்திருக்கிறார். நான் இலங்கை தமிழர்களை ஆதரிக்கிறேன். கருணாநிதியோ, பயங்கரவாத புலிகளை ஆதரிக்கிறார். இதுதான் வித்தியாசம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருப்பது பற்றி கருணாநிதி குறிப்பிடுகிறார். வைகோ அரசியல் சாசனப்படி பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டு முதலமைச்சராகவோ, முக்கிய அரசாங்க பொறுப்பையோ வகிக்கவில்லை என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் ஒருவர் முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க முடியாது. இதன் தீவிரத்தை உணராமல் மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பதால் இவ்விஷயம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவதை தவிர அ.தி.மு.க.வுக்கு வேறுவழியில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.