தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் அயலூர் செல்வதற்கு பேருந்து கிடைக்காமல் தவித்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் தந்தால் இடம் பிடித்து தருவதாக கூறிய ஆம்னி பேருந்து புரோக்கர்கள் 3 பேர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
தீபாவளியை முன்னிட்டு அயலூர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதுகிறது. தென்மாவட்டம், அயல் மாநிலங்களுக்கு செல்லும் எல்லா பேருந்துகளிலும் முன்பதிவு முடிந்து விட்டது. முன் பதிவு செய்யாத பயணிகள் அயலூர்களுக்கு செல்ல பேருந்து கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பேருந்து கிடைக்காமல் தவிக்கும் பயணிகளிடம் டிக்கெட்டுக்காக சில புரோக்கர்கள் அதிக பணம் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில், திருமங்கலம் உதவி ஆணையர் அழகுசோலை மலை தலைமையில் கோயம்பேடு காவலர்கள் மாறுவேடத்தில் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு கண்காணிப்பு மேற்கொண்டனர்.
அப்போது கூடுதல் கட்டணம் வாங்கிக் கொண்டு பயணிகளை ஆம்னி பேருந்துக்கு அழைத்துச் சென்ற சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கனி (35), பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்த முருகன் (34), சைதாப்பேட்டை திடீர் நகரைச் சேர்ந்த மனோகர் (38) ஆகியோரை மாறுவேடத்தில் நின்ற காவலர்கள் மடக்கிப்பிடித்தனர்.
இது பற்றி போக்குவரத்து இணை ஆணையர் யோகராஜ் கூறுகையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரி தலைமையில் காவல்துறையினருடன் இணைந்து ஆம்னி பேருந்து அலுவலகங்கள் கண்காணிக்கப் படுகின்றன. 11ஆம் தேதி வரையிலும் புரோக்கர்கள் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள்.
இரவு 7 மணி முதல் 11 மணி வரை டிக்கெட் புக்கிங் கண்காணிக்கப்படும். வெளிநபர்கள் நடமாட்டம், செயல்பாடு குறித்து காவலர்கள் விசாரிப்பார்கள். ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் அதன் பெர்மிட் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பயணச் சீட்டில் உள்ள கட்டணத்தை மட்டுமே செலுத்தி பயணம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து இணை ஆணையர் கூறினார்.