அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.மா.வேலுச்சாமி, வேலுமணி ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி பெங்களூரில் அ.தி.மு.க. சார்பில் அத்திக்கடவு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடும் காவலர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செ.மா.வேலுச்சாமி, பேரூர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கோவை அரசு விருந்தினர் மாளிகை காவலாளி ஏ.சுப்பிரமணி என்பவர் இவர்களுக்கு எதிராக அவினாசிபாளையம் காவல்துறையில், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் செய்தனர்.
அதன் பேரில் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 50 அ.தி.மு.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் மூன்று பேர் சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், அரசின் பழிவாங்கும் நோக்கத்துடன் பொய்யான புகாரின் பேரில் எங்களது மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.