''தமிழகத்தில் ஏராளமான வன்முறைகள் நடைபெற்று வருவதால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது'' என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் எச். ராஜா குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் கருணாநிதி தன்னுடைய உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுவதால் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் மறைந்த போது அவருடைய வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தியதாக கூறியுள்ளார்.
அப்படியானால், அவருடைய சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட போது அவருடைய வீட்டுக்கு முதலமைச்சர் கருணாநிதி அஞ்சலி செலுத்த போகாதது ஏன்? குறைந்த பட்சம் தி.மு.க. செயற்குழுவில் தா.கிருஷ்ணன் படுகொலைக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? அப்போதெல்லாம் கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே போனது?
புலிகளின் பிரச்சனையில் மட்டுமன்றி தி.மு.க. ஆட்சியை கலைக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. உச்ச நீதிமன்றம் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய காரணம் இருப்பதாக கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி மோசமான தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே வன்முறைகள் வெடிக்கின்றன. இப்போது ஜாதிச் சண்டையும் தொடர்கிறது.
இப்படி ஏராளமான வன்முறைகள் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் சட்டம்-ஒழுங்கு நிலை தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து நீடித்தால் தமிழகத்துக்கு ஆபத்து உருவாகும் என்று பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் எச்.ராஜா குற்றம்சாற்றியுள்ளார்.