ஈரோடு கரூர் இடையே ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
ரயில் தண்டவாளத்தில் இருபுறமும் ஜல்லி கற்கள் நிரப்பப்பட்டு இருக்கும். ரயில்கள் வேகமாக செல்ல இந்த ஜல்லி கற்கள் உதவுகின்றன. ஜல்லிக் கற்களில் மண் துகள் நிரம்பி கான்கீரிட் போல இருந்தால் ரயில் செல்லும் போது அதன் வேகம் குறைந்து விடும்.
ஜல்லி கற்களில் உள்ள மண்ணை அகற்றி, மண் இல்லாத ஜல்லிகளை தண்டவாளங்களில் நிரப்பினால்தான், ரயில் ஓடும்போது அதன் வேகம் சீராகவும், வேகமாகவும் இருக்கும்.
ஈரோடு கரூர் மார்கத்தில் தண்டவாளத்தில் ஜல்லி கற்களில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றி, மீண்டும் கற்கள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. ரயில் தண்டவாளத்தில் ஜல்லி சலிக்கும் எந்திரம் கொண்டு ஜல்லி கற்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரயில் தண்டவாளப் பகுதியில் உள்ள ஜல்லியை சலித்து, மண்ணை அகற்றி, மறுசீரமைப்பு பணியில் ஈடுபடுவர். தற்போது பெரும் மினினைக் கொண்டு ஜல்லி சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.ஈரோடு அருகே தம்பிரான்வலசு கிராமத்தில் இப்பணி நடக்கிறது.
ரயில்வே ஊழியர் ஒருவர் கூறியதாவது:ரயில் தண்டவாளங்களில் இருபுறமும் உள்ள ஜல்லி கற்களில் மண் நிரம்பிவிட்டால் ரயில் வேகம் குறைந்து விடும். ஜல்லி கற்கள் மண் இல்லாமல் இருந்தால் ரயில் செல்லும் போது தண்டவாளத்தில் அழுத்தம் ஏற்பட்டு வேகம் அதிகரிக்கும். ஜல்லியில் நிரம்பியுள்ள மண்ணை அகற்ற எஸ்.பி.சி.பி., என்ற ஜல்லி சலிக்கும் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 100 ஆள் சேர்ந்து செய்யும் வேலையை இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கும். பல நாட்கள் நடக்க வேண்டிய பணி ஒரு சில நாளில் முடிந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.