சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் சிலை உடைப்பு, காவலர்களின் தடியடியை கண்டித்து தென் மாவட்டங்களில் ஒரு நாள் முழு அடைப்பு நடத்தப்படும் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சேதுராமபாண்டியன் கூறினார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த வேலாயுதபுரத்தில் முத்துராமலித்தேவர் சிலை உடைக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்கள் மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்திற்கு பார்வர்டு பிளாக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சேதுராமபாண்டியன் கூறுகையில், வேலாயுதபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. வெண்கல சிலை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 26 பேரை விடுவிக்க வேண்டும் என்று கோரினோம். அதற்கு காவல்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
சிலை உடைப்பு, காவலர்களின் தடியடியை கண்டித்தும், சமீபகாலமாக காவலர்கள் திட்டமிட்டு குறிப்பிட்ட பிரிவினர் மீது வழக்கு, கைது என தவறான போக்கை கண்டித்தும் தென்மாவட்டங்களில் ஒரு நாள் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கு முன்பாக நெல்லையில் உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டுள்ளோம். கட்சியின் மாநில தலைவர் கார்த்திக்குடன் கலந்து பேசி அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று சேதுராமபாண்டியன் கூறினார்.