சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாளை (6-ஆம் தேதி) மதிய உணவு இடைவேளை இல்லாமல் தொடர் பணியாற்றும் போராட்டம் நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் 5-வது பெருநகர குற்றவியல் நீதிபதி முருகானந்தம் கடந்த 31ஆம் தேதி வழக்கறிஞர்கள் சிலரால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் இளங்கோ, தங்கதுரை கைது செய்யப்பட்டனர். மேலும் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 3ஆம் தேதி நடந்தது. சங்கத் தலைவர் மாவட்ட நீதிபதி பி.ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் தாக்கப்பட்ட நீதிபதி, அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மற்ற நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து சங்கத் தலைவர் பி.ராமலிங்கம் கூறுகையில், எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிபதி மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகள் ஒற்றுமையை காட்டும் வகையில் முதல்கட்ட நடவடிக்கையாக சாத்வீக முறையில் தமிழ்நாட்டில் உள்ள 750 முன்சீப், பெருநகர குற்றவியல் நீதிபதிகள், சப்-ஜட்ஜ், மாவட்ட நீதிபதிகள் 6ஆம் தேதி நீதிமன்றங்களில் மதிய உணவு இடைவேளை இல்லாமல் தொடர் பணியாற்றும் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது என்றார்.