தமிழன் என்பதால் இரங்கல்-ஜெ.வு‌க்கு கருணாநிதி ப‌தி‌ல்

Webdunia

ஞாயிறு, 4 நவம்பர் 2007 (16:19 IST)
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகர் தமிழ்ச்செல்வன் தமிழன் என்பதால் தான் இரங்கல் தெரிவித்தேன் என்று ஜெயலலிதாவிற்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதி எழுதிய கவிதாஞ்சலிக்கு கண்டனம் தெரிவித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதியிடம், தமிழ்ச்செல்வன் மறைவுக்கு நீங்கள் இரங்கல் தெரிவித்ததையொட்டி, ஜெயலலிதா அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று கூறியிருக்கிறாரே என்று கேட்டனர்.

அதற்கு கருணாநிதி, பாவம், ஆட்சியில் இல்லாத காரணத்தால் ஆத்திரத்தில் அல்லற்படுகிறார். எதிர்க்கட்சிக்காரர் ஒருவர் மறைந்தாலே இரங்கல் தெரிவிப்பது மனித நேயப் பண்பாடு என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தெரியும்.

அந்த அடிப்படையில்தான் அ.தி.மு.க.விலே இருந்த நாவலர் மறைந்த போது கூட, நான் தேடிச்சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன். இலங்கையிலே கொல்லப்பட்டது ஒரு தமிழன். என் உடலில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் நான் இரங்கல் தெரிவித்தேன்.

ஏன், ஜெயலலிதாவுடன் இன்றளவும் தோழமை கொண்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஜெயலலிதா இல்லத்திற்குச் சென்று வந்த ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழ்ச்செல்வன் மறைவுக்காக உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து கண்டிக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தால் அதற்கு ஜெயலலிதா ஒப்புதல்.

அதே தமிழ்ச்செல்வன் மறைவுக்காக நான் அறிக்கை விடுத்தால் என்னுடைய ஆட்சியைக் கலைக்க வேண்டுமா? எப்படியாவது ஆட்சி கவிழ்க்கப்படாதா? தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து சுரண்ட முடியாதா என்று ஜெயலலிதா, தவியாய் தவிக்கிறார். என்ன செய்வது? ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் மக்கள் ஆதரவு வேண்டுமே? என்று பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்