திமுக அரசை பதவிநீக்க ஜெயலலிதா கோரிக்கை

Webdunia

ஞாயிறு, 4 நவம்பர் 2007 (13:50 IST)
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைந்ததற்கு கவிதாஞ்சலி எழுதிய திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசை பதவி நீக்க வேண்டும் என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த 2ஆம் தேதி இலங்கை ராணுவத்தின் வான் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தார். அது எல்லா செய்தி ஊடகங்களிலும் பிரசுரமானது.

இது குறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மறைந்ததற்கு கருணாநிதி கவிதை எழுதி அதனை அரசு ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வி. பிரபாகரனின் தலைமையில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கருணாநிதி ஆதரவு அளிக்கும் விதமாக கவிதை எழுதியுள்ளார்.

எனவே திமுக தலைமையிலான அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கருணாநிதி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறோரோ அப்போதெல்லாம் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்கிறார் என்றும் தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்