சென்னை மாநகர மக்கள் தங்கள் பகுதியிலுள்ள குறைகளை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் முறையை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியம் கூறுகையில், ''சென்னை வாழ் பொது மக்களில் பெரும்பாலானவர்கள் மொபைல் உபயோகித்து வருகின்றனர். எனவே, அவர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க எஸ்.எம்.எஸ். சேவையை பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்கள் தங்களின் குறைகளை 97899 51111 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்தவுடன் அவை உடனடியாக, கணினி மூலம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மொபைல்களுக்கு அனுப்பப்படும்.
தகவல் வந்ததும் குறைகளைச் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பின்பு எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் தலைமை அலுவலகத்திலுள்ள கணினி மூலம் புகார் தெரிவித்தவருக்கு அனுப்பப்படும்.
இந்த சேவையை மூன்று ஆண்டு காலம் ரூ.6,83,676/ செலவில் செய்வதற்கு, லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் ஒப்பந்தம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் தங்கள் குறைகளை எளிதாகவும், விரைவாகவும் சிக்கனமான முறையிலும் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்'' என்றார்.