சிங்கள அரசிற்க்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுக்கும் இந்திய அரசும், அதைப் பார்த்துக் கொண்டும் வாய்மூடி மௌனியாக இருக்கும் தமிழக அரசும் தங்கள் நிலைகளை இப்போதாவது மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தந்துள்ளது.
1984-இல் போராளியாக அறிமுகமாகி அதன் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவருக்கு தனி உதவியாளராகவும், யாழ் மாவட்ட தளபதியாகவும் பின்னர் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராகவும் அவரின் பலகட்ட வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்த எம்மை இந்தச் செய்தி பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிறிலங்கா வான்படையின் கொடூரமான வான் தாக்குதலில் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஐந்து போராளிகளை இழந்து நிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழத் தமிழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அழகிய புன்னகையுடனும் ஆழமான, தெளிவான, நிதானமான பேச்சுக்களுடனும் உலகத் தமிழரால் பார்த்துவரப்பட்ட அந்தப் பெருமகன் இன்று நம்மோடு இல்லை.
சிங்கள அரசின் இராணுவ, பொருளாதார இலக்குகளை மட்டும் தாக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் காட்ட முயல்வோர், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புலிகள் தரப்பில் தலைமை ஏற்றிருந்த அரசியல்துறை தலைவரையே குறிவைத்து படுகொலை செய்தமைக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
இப்படிப்பட்ட வெறித்தனமான சிங்கள அரசிற்க்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுக்கும் இந்திய அரசும், இதைப் பார்த்துக் கொண்டும் வாய்மூடி மௌனியாக இருக்கும் தமிழக அரசும் தங்கள் நிலைகளை இப்போதாவது மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.