முதுகளத்தூர் அருகே தாக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி இன்று விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள மதுரை சென்ற போது முதுகுளத்தூர் அருகே ஒரு கும்பல் வழிமறித்து வேல் கம்புகளால் தாக்கியது. படுகாயம் அடைந்த அவரை மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் அவரை சென்னைக்குக் கொண்டு வந்து மேல் சிகிச்சை தர அவரது குடும்பத்தினர் விரும்பினர். இதையடுத்து, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் பிற்பகல் 12.45 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கிருஷ்ணசாமிசென்னைக்கு கொண்டு வரப்பட்டார். அவருடன் மகன் விஷ்ணு பிரசாத், மகள் செளம்யா அன்புமணி, டாக்டர்கள் குழுவும் வந்தனர்.
சென்னை வந்து சேர்ந்ததும் நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு கிருஷ்ணசாமியை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக மதுரையில் விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், தந்தையின் உடல் நலம் நிலையாக இருப்பதாகவும், அவர் வேகமாக தேறி வருவதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கருத்து கூற மறுத்துவிட்டார் விஷ்ணு பிரசாத்.