2011ஆம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என்பது வெற்று முழக்கம் அல்ல. தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்கி கூட்டணி ஆட்சி அமைப்பதில் மிகவும் உறுதியாக இருப்பதாக பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், 2020ம் ஆண்டு சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் தமிழர்களும், தமிழகமும் எத்தகைய நிலையை எட்டவேண்டும் என்று பா.ம.க. விரும்புவதை ஒரு வரைவு திட்டமாக வெளியிடுவோம் என்றும் இனி பா.ம.க.வின் அரசியல் நடவடிக்கை, பயணம் அந்த இலக்கை நோக்கியே அமையும் என்றும் தெளிவுப்படுத்தியிருந்தோம்.
காங்கிரஸ் தலைவர்களும் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதைப்போலவே நான் 2011ஆம் ஆண்டு பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து தெரிவித்தேன். அரசியல் கட்சிகளின் இந்த விருப்பம், லட்சியம் குறித்து அரசியல் சாணக்கியரான கருணாநிதிக்கு மிக நன்றாகத் தெரியும்.
அண்மையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், "2011ம் ஆண்டு பா.ம.க. ஆட்சிக்கு வரப்போகிறது, அப்போது காவல் துறையை அவர்கள் செயல்பட வைக்கட்டும், முன்கூட்டியே அட்வான்ஸ் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்'' என்று சொல்லியிருக்கிறார். அவர் எத்தகைய எண்ணத்தில், நோக்கத்தில் கூறியிருந்தாலும், அவருடைய இந்தக் கருத்தை வாழ்த்துக்களாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். ஆட்சியைப் பிடிப்போம், ஆட்சிக்கு நிச்சயம் வருவோம் என்று நாங்கள் சொல்வது வெற்று முழக்கம் அல்ல. நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொன்னதில் எந்தத் தவறும் இல்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் பாதுகாப்பு சம்பந்தமாக காவல் துறையினரின் கவனக்குறைவு பற்றி மட்டுமே விசாரிக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களின் பயணத் திட்டங்கள் எல்லாவற்றையும் காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டியதில்லை. கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திடீர் திடீர் என பயணத் திட்டம் மாற்றப்படும். எனவே, இந்த விசாரணை வரம்பை மாற்ற வேண்டும். பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை!
சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை "தமிழ்நாடு உயர்நீதி மன்றம் - சென்னை', "தமிழ்நாடு உயர்நீதி மன்றம் - மதுரை' என்று மாற்றம் செய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அரியலூர் மாவட்டம் தாமதமின்றி தனி மாவட்டமாக செயல்பட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்து கூறுகையில், ஆட்சியைப் பிடிப்போம் என்று பலமுறை காங்கிரசார் கூறியும் அதற்கு பதிலளிக்காத முதலமைச்சர், நாங்கள் அவ்வாறு கூறியபோது கருத்து தெரிவித்திருப்பது நிச்சயம் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.
தமிழத்தில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை பத்திரிகையாளர்கள்தான் சொல்ல வேண்டும். 2011ம் ஆண்டு தி.மு.க, அ.தி.மு.க. இல்லாத அணியை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். 2009ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில்தான் பா.ம.க. இடம் பெறும். இனி எப்போதும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று ராமதாஸ் கூறினார்.