தமிழக முதலைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஜெயலலிதா மீது தமிழக சட்டப்பேரவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது!
முதலமைச்சர் கருணாநிதியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன்னை கொல்ல சதி செய்ததாக ஜெயலலிதா குற்றம்சாற்றி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து, சட்டசபையில் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தார். இதனை ஆய்வு செய்த உரிமைக்குழு உறுப்பினர்கள், ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பினர்.
அதில், உங்கள் (ஜெயலலிதா) மீது கொடுக்கப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்சனைக்கு விளக்கத்தை எழுத்து மூலமாக நவம்பர் 2ஆம் தேதி தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த சம்மனுக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.