இதே கூட்டணி தொடர்ந்தால் வெற்றி: கருணாநிதி!

Webdunia

வெள்ளி, 2 நவம்பர் 2007 (09:50 IST)
''எ‌ன்றை‌க்கு கவ‌ிழு‌ம் எ‌ன்று எ‌ண்‌‌ணி‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்ற பலபே‌ர் நா‌ட்டிலே இரு‌க்‌‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களுக‌்கு இட‌ம் தராம‌ல் முக‌த்‌திலே க‌ரியை பூ‌சி ந‌ம்முடைய பயண‌ம் தொடருமானா‌ல் இதை‌ப் போ‌ன்று இ‌ன்னு‌‌ம் பல வெற்றிகளை பெற முடியும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

பு‌‌திய சேலம் ரயில்வே கோட்ட‌த்தை தொட‌ங்‌கி வை‌த்து முதலமைச்சர் கருணாநிதி பே‌சுகை‌யி‌ல், சேலத்தில் இது போன்றதொரு பெரிய திட்டம் வரவேண்டும் என்பதற்காக இன்று நேற்றல்ல. 60 ஆ‌ண்டு காலமாக நாம் முறையீடு வைத்திருக்கிறோம். மாநில அரசும்- மத்திய அரசும் மோதிக்கொள்ளாமல் இருந்தால் மக்களுக்கு பல காரியங்களைச் செய்ய முடியும் என்று அண்ணா அந்த ஏட்டிலே தீட்டியிருந்தார். அதுபோல நாம் இன்று நடத்துவது புகைவண்டித் தொடர்விழா. அதனால் உதாரணம் அப்படியே சொல்கிறேன். இரண்டு தண்டவாளங்கள் இணைந்து ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் இருக்கின்ற காரணத்தினால் தான் ரெயில் ஒழுங்காகப் போக முடிகிறது.

அதைப்போல மாநில அரசும், மத்திய அரசும் இரண்டு தண்டவாளங்களாக இருக்குமேயானால் இப்படிப்பட்ட அரிய வெற்றிகளையெல்லாம் நாம் பெற முடியும். அதைப்போலவே தமிழ் நாட்டிலே நாம் காட்டுகின்ற ஒற்றுமை; ஒரு புகை வண்டித் தொடரிலே இருக்கின்ற வண்டிகளைப்போல, பெட்டிகளைப்போல நாம் இன்றைக்கு இருக்கின்றோம். இந்த பெட்டிகளிலே ஒரு பெட்டி தவறினாலும் ஒரு பெட்டி தண்டவாளத்திலே இருந்து இறங்கினாலும் அந்த ஒரு பெட்டியோடு மாத்திரமல்ல, மற்ற பெட்டிகளையும் அது இழுத்துக் கொண்டு தண்டவாளத்தை விட்டு இறங்க நேரிடும். அதற்கு இடங்கொடுக்காமல் நாம் இந்த ரெயில் பெட்டிகளை இழுத்துச் செல்லுவோம்.

இந்த ரெயில் பெட்டிகளை இணைத்த இந்த ரெயிலை நாம் நடத்திக் கொண்டிருப்போம். இந்த புகைவண்டித்தொடர் தன்னுடைய பயணத்தை நடத்தட்டும். இது என்றைக்கு கவிழும், என்றைக்கு இது கீழே விழும், எந்தப்பாலத்திலே விழும், எந்த வெள்ளத்திலே சிக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற பலபேர் நாட்டிலே இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இடம் தராமல் அவர்களுடைய முகத்திலே கரியைப் பூசி நம்முடைய பயணம் தொடருமேயானால், இதைப் போன்ற இன்னும் பல வெற்றிகளை இந்தத் தமிழகம் பெறமுடியும். நம்மால் பெற்றுத் தரமுடியும் என்ற உறுதியை உங்களுக்கெல்லாம் அளிக்கிறேன்.

நதிகள் இணைப்பு எப்படி இந்தியாவின் ஒற்றுமைக்கு பலமானதோ, ஒற்றுமைக்கு தேவையானதோ அதைப்போல இந்த இருப்புப்பாதைகளின் இணைப்பும் இந்திய ஒற்றுமைக்குத் தேவையானது, அத்தியாவசியமானது, இன்றியமையாதது. எனவே நதிகளை இணைக்க கொஞ்சம் நாளாகலாம். அதற்கு முதலிலே இருப்புப் பாதைகளை இணையுங்கள், அதற்கு இன்னும் ஒரு திடமான உறுதி வேண்டும். அந்த உறுதியை- லாலு பிரசாத்தைப் பொறுத்தவரையில் வேறெங்கும் சென்று தேடி வாங்க வேண்டியதில்லை. அவரே உறுதியின் உருவம் என்ற காரணத்தால் அதை நிச்சயமாக நடத்திக் காட்டுவார் என்று நான் நம்புகிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்