''சென்னை அரசு மருத்துவமனையில் கட்டண வார்டு விரைவில் திறக்கப்படும்'' என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், விழுப்புரம், திருவாரூர், தர்மபுரி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இந்த கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் தலா 100 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதுபோல மற்ற மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.
சிறுநீரக மோசடியைத் தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்ட திருத்தத்தின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். சிறுநீரக மோசடி குறித்து விசாரிக்கும் மருத்துவப் பணிகள் இயக்குனரிடம் இருந்து இன்னமும் அறிக்கை வரவில்லை.
சென்னை அரசு மருத்துவமனையில் கட்டண வார்டு விரைவில் திறக்கப்படும். இருதயத்தை 64 கூறுகளாக பிரித்து அடைப்புகளை கண்டறிய உதவும் நவீன (64 சிலைஸ்) சி.டி.ஸ்கேன் கட்டணம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக குறைக்கப்படுகிறது. இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
போலி மருத்துவர் பற்றி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் அல்லது சுகாதாரத் துறை செயலர் அல்லது சுகாதாரத் துறை அமைச்சரிடம் தகவல் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலி மருத்துவர்களை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறினார்.