குண்டு துளைக்காத காரை ஏற்கத் தயார்: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்தி‌ல் ஜெயலலிதா மனு!

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (17:01 IST)
கு‌ண்டு துளை‌க்காத காரை ஏ‌ற்க‌த் தயா‌ர் எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌தி‌ம‌ன்ற‌‌‌த்த‌ி‌ல் ஜெயல‌லிதா மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

இசட் பிளஸ் பிரிவின்படி முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், தனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு வேண்டும் என்றே குறைத்து விட்டதாகவும் கூறி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.சுகுணா முன்பு நடைபெற்று வருகிறது.

கடந்த முறை விசாரணைக்கு வந்த போது உள்துறை செயலாளர் மாலதி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜெயலலிதாவுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கி வருவதாகவும், அரசு சார்பில் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத காரை அவர் வாங்க மறுத்து விட்டார் என்றும் பதில் மனுவில் கூறி இருந்தார்.

இ‌ந்த வழக்கு மீண்டும் நீதிபதி சுகுணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “தமிழகத்தில் முன்பு முதல்மைச்சராகவும், தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு தேசிய பாதுகாப்பு படை பிரிவின் கீழும் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழும் முழுமையான பாதுகாப்பு கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டது. நான் கடந்த ஆண்டு முதலமைச்சர் பதவி காலம் முடிந்த பிறகு எனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு வேண்டும் என்றே குறைத்து விட்டது.

நான் குண்டு துளைக்காத காரை வாங்க மறுத்து விட்டதாக உள்துறை செயலாளர் கூறி உள்ளார். நான் ஒரு போது‌ம் குண்டு துளைக்காத கார் வேண்டாம் என்று கூறவில்லை. இதனை ஏற்க மறுத்து யாருக்கும் கடிதமும் எழுதவில்லை. அவர்கள் வழங்கினால் குண்டு துளைக் காத காரை பெற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.

ஆந்திர மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு இசட் பிளஸ் பிரிவின் படி முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் இசட் பிளஸ் பிரிவின் கீழ் உள்ள எனக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். எனது பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கவும், கண்கா‌ணிக்கவும் ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும். அந்த கமிட்டியில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. எனது விருப்பபடி ஓய்வு பெற்ற 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற வேண்டும். இந்த குழு அமைத்து எனது பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும” என்று அந்த பதில் மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.விடுதலை கேட்டுக் கொண்டார்.

அதற்கு நீதிபதி சுகுணா இந்த வழக்கு இரு தரப்பிலும் மாறி, மாறி பதில் மனு தாக்கல் செய்து கொண்டிருப்பதால் விசாரணை நீண்டு கொண்டே போகும். எனவே இந்த வழக்கை இறுதி விசாரணை நடத்துவதற்காக வரும் 6ஆ‌ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்