முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு அதற்கு அருகே புதிய அணையை கட்டுவோம் என்று கேரள அரசு கூறி வருவதை ஏற்க முடியாது என்றும், அம்முயற்சிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்!
மதுரையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, கேரளா எழுப்பி வரும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசை அணுகுவோம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, பெரியாறு அணையின் நீர் தேக்கும் அளவை 142 அடிக்கு உயர்த்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று கருணாநிதி கூறினார்.
அப்பொழுது பேசிய தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், கேரள அரசு தனது நீர்ப் பாசன சட்டத்தில் ஒரு திருத்தத்தைச் செய்து முல்லைப் பெரியாறு அணையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது என்றும், அந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இறுதி தீர்ப்பு வந்த பிறகு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுப்போம் என்று கூறினார்.