பூண்டி ஏரிப்பகுதியில் வெள்ள எச்சரிக்கை!

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (15:30 IST)
கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக பூண்டி ஏரியில் நீர்மட்டம் அபாய அளவிற்கு உயர்ந்துள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய ஏரியான பூண்டி கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நிரம்பி வருகிறது. இதன் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி (35 அடி). தற்போது 2398 மில்லியன் கனஅடி (32.57 அடி) தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.

ஆந்திராவின் கண்டலேறு அணை நீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக நொடிக்கு 150 கன அடியும், மழைநீர் 1,067 கன அடி தண்ணீர் ஏரியை வந்தடைந்துள்ளது. நேற்று ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணைக்கட்டு நிரம்பியதால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் நகரி, திருத்தணி, இலுப்பூர், கனகம்மாள் சத்திரம், முத்து கொண்டாபுரம், பாண்டூர் வழியாக பூண்டி ஏரியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் இன்று மாலைக்குள் நிரம்பிவிடும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது. அவ்வாறு ஏரி நிரம்பும் பட்சத்தில் 2000 கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்று தெரிகிறது.

ஏரியின் நிலவரம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு பொதுப்பணித்துறையினர் அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சி‌த் தலைவ‌ர் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ள அபாயம் காரணமாக பூண்டி ஏரியின் கரையோரத்தில் இருக்கும் பீமர்தோப்பு, நெய்வேலி, ஆட்ரம்பாக்கம், காரனோடை உ‌ள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்