தேவர் ஜெயந்திக்கென ஜெயலலிதா ஆட்சியின் போது 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
மதுரையில் இன்று முதலமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஏராளமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவுக்கு குறைவாக நிதி ஒதுக்கியிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவர்கள் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறாகும். அவர் 3 கோடி ரூபாய் ஒதுக்கியதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்.
இதே போல வைகோவும் என்னிடம் சேது சமுத்திர திட்டம் பற்றி முதலமைச்சராக இருந்த போது, கடிதம் எழுதியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவதாக கூறியிருந்தார். நான் நிரூபித்தேன். ஆனால் அவர்கள் போகவில்லை. இப்போது இதை நிரூபித்தால் நான் விலகத் தயார்.
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் விரைவில் தேர்தல் வரப்போகிறது என்றும், தி.மு.க. அரசை விரட்ட முக்குலத்தோர் ஒன்றுபட்டு அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். நான் தேவர் நூற்றாண்டு விழாவுக்காக மரியாதை செலுத்த வந்தேன். அவர்கள் தாங்கள் வந்தவேலையை பார்த்திருக்கிறார்கள்.
மதுரை திருநகரில் உள்ள தேவர் இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பிரச்சனை நீதிமன்றத்திலே உள்ளது. பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்து சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டு வருகிறது.
தேசிய பயிர் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்த்துவது தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். அந்த பாதையில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்ததாக காவல் துறை கூறுகிறது. விசாரணையின் முடிவில்தான் எல்லாம் தெரியவரும் என்று முதலமைச்சர் கூறினார்.