மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 23வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் அவரது சிலைக்கு தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தி தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
இந்திராகாந்தியின் 23-வது நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதையொட்டி இந்திரா காந்தியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. படத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நினைவு நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
சைதாப்பேட்டையில் உள்ள நரிக்குறவர் பள்ளிக் கூடத்தில் நடந்த இந்திராகாந்தி நினைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், சீருடைகளை வழங்கினார்.
யானைகவுனியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு கார்த்தி சிதம்பரம், கராத்தே தியாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்லகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு கார்த்தி ப. சிதம்பரம் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி செய்து வைத்தார். அவர் அந்த உறுதிமொழியை வாசிக்க, மற்றவர்கள் அதனை திரும்பக் கூறினர். பின்னர், ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகர் பிரிவு சார்பில் தலைமை அலுவலகமான அன்னை தங்கம்மை அரங்கில் அலங்கரிக்கப்பட்ட இந்திரா காந்தி திருவுருவப்படத்திற்கு மாநில துணைச் தலைவர்கள் சித்ரா கிருஷ்ணன், நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.