தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி முதுகுளத்தூர் அருகே மர்ம கும்பலால் வேல் கம்பால் குத்தப்பட்டார். இதில் அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் ரோகிணி ஸ்ரீதர் தலைமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மணி நேரம் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணசாமி அபாய கட்டத்தை தாண்டி விட்டார். தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
3-வது நாளாக கிருஷ்ணசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண குணமடைவார் என்றும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணசாமியை முதலமைச்சர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ரவிசங்கர் பிரசாத், திருநாவுக்கரசர், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல்.திருமாவளவன், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.