மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூ‌ட்ட ஏ‌ற்பாடு: கருணாநிதி!

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (09:53 IST)
மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட முயற்சி மேற்கொள்வேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு ஜெயந்தி விழா தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நேற்று நடந்தது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி கட்டப்பட்ட கட்டடங்களை கருணாநிதி திறந்து வைத்து பேசுகை‌யி‌ல், இந்திய நாட்டு விடுதலை போராட்டத்திலே அழிக்கமுடியாத இடத்தை, மறைக்கமுடியாத ஒரு இடத்தை பெற்றவர் தேவர் திருமகனாவார். குறைந்த வயதுதான். 55 ஆண்டுகள் தான் வாழ்ந்தார் என்றாலும் அந்த 55 ஆண்டு வாழ்க்கையும் 100 ஆண்டுகளில் ஒரு மனிதன் செய்யவேண்டிய அருமையான செயல்களை செய்து பேறும்புகழும் பெற்று திகழ்ந்தவர் தேவர் திருமகன் என்று சொன்னால் அது மிகையாகாது எ‌ன்றா‌ர்.

நா‌ன் மதுரைக்கு வரும்போதெல்லாம் என்னிடத்திலே சொல்லப்படுகின்ற கோரிக்கைகளில் முக்கியமான ஒரு கோரிக்கை மதுரை விமான நிலையத்திற்கு தேவருடைய பெயர் வைக்கவேண்டும் என்பதாகும். அதை நான் வைக்க முடியாது. காரணம் விமான நிலையம் மத்திய சர்க்காருக்கு தொடர்புடையது. ஒருமாநில சர்க்கார் அந்தப் பெயர் வைக்க முடியாது. ஆனால், மத்திய சர்க்காரை கேட்டுக்கொண்டு கேட்கிற விதத்திலே கேட்டு அதை பெற முடியும் எ‌ன்று முத‌ல்வ‌ர் கூ‌றினா‌‌ர்.

வி.பி.சிங் ஒரு முறை நம்முடைய சென்னை மாநகரத்தில் ஒரு விழாவிற்கு வந்திருந்த போது அங்கே தான்கேட்டேன். சென்னை விமானநிலையத்தில் ஒருபுறத்திலே உள்ள ஒரு விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரும், இன்னொரு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும் வைக்க வேண்டும் என்று நான் கூட்டத்திலே வேண்டுகோள் விடுத்தேன். அ‌ன்றைய ‌தினமே ‌வி.‌பி.‌சி‌ங், இர‌ண்டு தலைவ‌‌ர்களுடைய பெ‌ய‌ர்களு‌ம் வை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌த்தா‌ர். அந்த அறிவிப்பு இன்றைக்கு காமராஜர் விமான நிலையமாக, அண்ணா விமானநிலையமாக சென்னையில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள் என கருண‌நி‌தி ‌நினைவூ‌ட்டினா‌ர்.

அதைப்போல இதை மேடையிலேயே சொல்வதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், உங்களுடைய கருத்துகளை, உங்களுடைய எண்ணங்களை கடிதம் மூலமாக விரைவிலே நான் டெல்லி சென்றால் நேரிலே சந்திக்கின்ற நேரத்திலும், அவர்களிடத்திலே எடுத்துச் சொல்லி முத்துராமலிங்கத் தேவருடைய பெயரால் மதுரை விமான நிலையம் திகழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்