தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளி மாநிலங்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதே போல வெளிமாநில பேருந்துகள் தமிழகத்திற்கு புதிய வழித் தடத்தில் இயக்கவும் அம்மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் புதிய வழித் தடங்களில் பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் அந்த மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறுகையில், இந்த ஒப்பந்தப்படி சேலம்-பெங்களூர், கோயம்புத்தூர்-மைசூர், மதுரை- பெங்களூர் உள்பட புதிய வழித் தடங்களில் தமிழக அரசு விரைவு பேருந்துகள், இதர போக்குவரத்து கழகங்களின் 315 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதை போல பெங்களூர், மைசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு அந்த மாநில அரசு போக்குவரத்து கழகங்களின் 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் இரு மாநில அரசுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதே போல தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், கொல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு 39 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் சென்னை - காடம்புளா 2, மதுரை - திருவனந்தபுரம் 6, திருச்சி - திருவனந்தபுரம் 6, மதுரை - கொட்டாரக்கரா 6 ஆகிய புதிய பேருந்து சேவைகளை விரைவு போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது.
திருப்பூர் - திருச்சூர் 2, திருப்பூர் - பாலக்காடு 2, திருப்பூர் - குருவாயூர் 2, நாகர்கோவில் - திருவனந்தபுரம் 2, ராஜபாளையம் - மூணாறு 2, கன்னியாகுமரி - வர்க்கலா 1, ராஜபாளையம் - கொல்லம் 3, தூத்துக்குடி - கொட்டாரக்கரா 2, தேனி - காஞ்சனம் பாறை 1 ஆகிய வழித்தடங்களில் இருந்து தமிழக அரசின் மற்ற போக்குவரத்து கழகங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
இதே போல கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு 26 வழித் தடங்களில் அந்த மாநில அரசு பேருந்துகளை இயக்க உள்ளது.
தமிழகத்தில் இருந்து புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு 169 பேருந்துகளை இயக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 39 பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதற் கட்டமாக சென்னையில் இருந்து மயிலாடுதுறை, புதுச்சேரி, வேளாங்கண்ணி ஆகிய வழித் தடங்களில் விரைவு பேருந்துகளை இயக்க உள்ளது. இது தவிர ஐதராபாத், திருப்பதி, நெல்லூர், காக்கி நாடா போன்ற பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க ஆந்திர அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது.