சென்னை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டம் ஆரம்பித்ததும் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், மறைந்த மயிலாப்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.
இதைக் தொடர்ந்து மேயர் மா.சுப்பிரமணியன் மாநகராட்சியின் ஓராண்டு சாதனைகள் குறித்து பேசுகையில், சென்னை மாநகராட்சியில் 4 அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்த 24 மணி நேரத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் குழுவின் சார்பாக 139 வடிகால் பணிகள் 22.17 கோடி மதிப்பீட்டில் 55 கி.மீ. தூரத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெய்த கனமழையிலும் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை. மேலும், 151 மழைநீர் வடிநீர் கால்வாய் 25 கோடி மதிப்பீட்டில் 35 கி.மீ. தூரத்திற்கு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் 57 தேர்வு சாலைகள் 24.17 கி.மீ. நீளத்திற்கு ரூ.988.37 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து பொறியியல், மருத்துவ மேற்படிப்பு பயிலும் 25 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் படிப்புக்காலம் வரையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள வாகனங்கள் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு அவற்றின் நடமாட்டங்கள் ஜிஐஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒளிவு மறைவற்ற ஒப்பந்தங்கள் கோரப்படுவது தொடர்பாக இணைய தளத்தில் அவை வெளியிடப்படுகின்றன என்று மேயர் கூறினார்.