பனிரெண்டு மணி நேரத்தில் சென்னையில் நேற்று 12 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
சென்னை நகரில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது நேற்று நள்ளிரவு வரை பெய்தது. சில சமயங்களில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான 12 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 11.82 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 11.67 செ.மீ. மழையும் பதிவானதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
71 அடி உயர வைகை அணை நீர் மட்டம் நேற்று 63.48 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 995 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,241 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 4,303 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியை எட்டியது. 136 அடியைத் தொட்டதும் இறுதி எச்சரிக்கை விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை 143 அடி கொள்ளவை கொண்டது. தற்போது அணையின் நீர்மட்டம் நேற்று 115.05 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 2 ஆயிரத்து 524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 2 ஆயிரத்து 405 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது.