வங்க கடலில் உருவான தீவிர காற்றழுத்த மண்டலம் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதன் காரணமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற கடலோர மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை, புறநகர் பகுதிகளிலும் நேற்று இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. இரவு, பகல் நேரங்களில் குளிர் வாட்டியது. தமிழ்நாட்டின் மற்ற கடலோர மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (திங்கட்கிழமை) மாலை கரையை கடக்கும் என்றும் இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தென்கிழக்கு, அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து வருகிறது.
அது ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இரவு 8.30 மணியளவில் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது.
இது மேலும் வலுவடைந்து தமிழகம், தென் ஆந்திர கடற்கரையோரம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கும், தென் ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள காவாலிக்கும் இடையே நெல்லூர் அருகே திங்கட்கிழமை (இன்று) மாலை கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். உள் தமிழகத்திலும் அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். உள் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு, விட்டு மழை பெய்வதோடு, ஒரு சில நேரங்களில் கனமழை பெய்யும்.
ஏற்கனவே அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. ஆனால் இதற்கும் தமிழ்நாட்டில் பெய்து வரும் மழைக்கும் சம்பந்தம் இல்லை.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் சென்னை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதேபோல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.