தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உள்ளிட்ட 5 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
நேற்று இரவு முதல் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக தஞ்சாவூர் அருகே உள்ள காமராஜர் காலனியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த தீபா (வயது 12), எழிலரசி (வயது 5), திவ்யா (வயது 3) ஆகிய சிறுமிகள் அதே இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல் வேதாரண்யம் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார்.
இதேபோல சென்னை பள்ளிக்கரணையில் இன்று காலை சக்கரபாணி (வயது 65) என்ற முதியவர் காலைக்கடன் கழிக்க சென்ற போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
மிதக்கிறது சென்னை
கன மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அதிக நீர்வரத் தொடங்கியுள்ளது.
நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்ததால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேளச்சேரி, மடிப்பாக்கம், கொளத்தூர், ரெட்டை ஏரி போன்ற தாழ்வான இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.