உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் தாண்டி அதிக அளவில் பதவி வகித்து வருகிறார்கள் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளில் 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் செய்யதிட்டமிட்டு கிராம ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் பேரூராட்சிகளில் அடிப்படை வசதி நிறைவேற்ற அனைத்து பேரூராட்சி அண்ணா மறு மலர்ச்சி திட்டம் தொடங்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
1989 ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தர்மபுரி மாவட்டத்தில்தான் முதன் முதலாக சுயஉதவிக்குழு தொடங்கப்பட்டது. கட்சிக்காகவோ, தேர்தலுக்காகவோ இதனை தொடங்கவில்லை. பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திட வேண்டும், யாருடைய தயவும் இன்றி தங்களது சொந்த காலில் நிற்கும் உணர்வினை பெற வேண்டும் என்பதற்காகதான் தொடங்கப்பட்டது என மு.க.ஸ்டாலின் கூறினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் தாண்டி அதிக அளவில் பதவி வகித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 12,618 கிராம ஊராட்சிகளில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு கணக்குப்படி 4,275 பேர் தான் தலைவர் பதவியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 4968 பேர் இருக்கிறார்கள். இது 31.37 விழுக்காடு ஆகும் என்று அமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நகராட்சிகளில் 40 விழுக்காடு பெண்களும், பேரூராட்சிகளில் 38 விழுக்காடு பெண்களும், ஊராட்சி ஒன்றியங்களில் 45 விழுக்காடு பெண்களும், மாநகராட்சிகளில் 50 விழுக்காடு பெண்களும் பதவியில் இருக்கிறார்கள். போகிற போக்கினை பார்த்தால் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கும் சூழ்நிலை வந்து விடுமோ என நினைக்க தோன்றுகிறது. பெண்கள் முன்னேற்றத்தில் அரும்பாடு பட்டு கொண்டு இருக்கும் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.