பவானிசாகர் அணையில் ‌நீ‌ர் திறப்பு: வெள்ள எச்சரிக்கை

Webdunia

சனி, 27 அக்டோபர் 2007 (11:53 IST)
webdunia photoWD
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சகதிகள் 15 அடி கழித்து அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும்.

ஒவ்வொறு வருடமும் அக்டோபர் மாதத்தில் பவானிசாகர் அணையில் 102 அடி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கவேண்டும் என்பது பொதுப்பணித்துறையினர் ஆணை. காரணம் திடீரென மழை வந்து தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி இந்த சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றனர்.

webdunia photoWD
இன்று காலை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.99 அடியாக இருந்தது. இதன் காரணமாக அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பவானி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க, அதிகரிக்க ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுப்படும் அளவும் அதிகரிக்கப்படும்.

இதன் காரணமாக பவானி ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.