விசைத்தறி நெசவாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

Webdunia

வெள்ளி, 26 அக்டோபர் 2007 (20:20 IST)
ஈரோடு பகுதியில் போனஸ் மற்றும் கூலி உயர்வு கோரி நேற்று முதல் விசைத்தறி நெசவாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர்!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதி விசைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்குவது சம்மந்தமான மூன்று ஆண்டுகால உடன்பாடு காலாவதி ஆகி விட்டதால் புதிய ஒப்பந்தம் போட வேண்டி உள்ளது.

இதற்காக சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எம்.எல்.எப்., ஆகிய தொழிற்சங்கங்கள் கோரிக்கை மனு கொடுத்து பேச்சு வார்த்தை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென புரட்சிகர தொழிலாளர் முன்னணியினர் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று காலை முதல் சென்னிமலை பகுதியில் விசைத்தறிகள் இயங்கவில்லை. போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு விசைத்தறி குடோன்களுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து வருகின்றனர். வேலை நிறுத்த அறிவிப்பால் பல இடங்களில் விசைத்தறிகள் இயங்கவில்லை.

ஆனால் பல்வேறு சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு இல்லை எனவும் மறைமுகமாக தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்