தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பட்டாசு கடைகளை அமைக்க 'தற்காலிக லைசன்சு' வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை, பூக்கடை அருகேயுள்ள பல தெருக்களில் பட்டாசுகளை தேக்கி வைக்கவும், விற்கவும் தடை விதிக்க வேண்டுமென்று, உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை முதல் டிவிசன் பெஞ்ச் விசாரணை செய்து, பட்டாசுகளை இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும், காவல் ஆணையரிடம் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும், இதன்பிறகு வெடிமருந்து கட்டுப்பாட்டு துறை லைசென்சு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
லைசென்சு பெற்றவர்கள் ஆயிரம் கிலோ எடையுள்ள பட்டாசுகளுக்கு மேல் கடைகளில் வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும், சாலைகளிலும், பொது இடங்களிலும் பட்டாசுகளை விற்க அனுமதிக்க கூடாது என்றும், தீயணைப்பு உபகரணங்களை வைக்க வேண்டுமென்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
பட்டாசுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாலும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பட்டாசு கடைகளை அமைக்க 'தற்காலிக லைசென்சு' வழங்க அனுமதி வழங்க வேண்டும் என்று அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது.
தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் சில மாற்றங்களை செய்து பிறப்பித்த உத்தரவு:
சென்னையில் பட்டாசு கடைகளை அமைக்க `தற்காலிக லைசென்சு' வழங்கலாம். அப்படி லைசென்சு வழங்கும்போது ஒரு கடைக்கும், இன்னொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
பட்டாசு கடைகள் எதிரெதிரே இருக்க கூடாது. 'தற்காலிக லைசென்சு' பெற்று அமைக்கப்படும் பட்டாசு கடைகளின் மேற்கூரைகள் நெருப்பு பற்றாத வகையில் கூரைகள் அமைக்க வேண்டும். மேலும், கடையை சுற்றி நெருப்பு பற்றாத பொருட்களை வைத்து அடைத்து வைத்திருக்க வேண்டும்.
நெருப்பு பற்றக்கூடிய வகையில் உள்ள எந்த பொருட்களையும் பட்டாசு கடைகளுக்குள் வைக்க கூடாது. பட்டாசு கடை முன்பு பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது.
இந்த சில்லறை விற்பனை பட்டாசு கடைகளுக்கும், பட்டாசுகளை இருப்பு வைக்கும் குடோனுக்கும் இடையே 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தீயணைப்பு உபகரணங்கள் ஏற்கனவே கூறியபடி அமைத்திருக்க வேண்டும்.