கருணாநிதி என்றுமே ராமருக்கு எதிரி இல்லை: அமை‌ச்‌ச‌ர் ஸ்டாலின்!

Webdunia

வெள்ளி, 26 அக்டோபர் 2007 (10:27 IST)
''கருணாநிதி என்றுமே ராமருக்கு எதிரி இல்லை'' என்று உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

கோபாலபுரத்திலே ஒரு கிருஷ்ணன் கோவில் உண்டு. இப்போதும் அந்த கோவில் இருக்கிறது. ஒரு முறை அந்த கோவில் முன்பாக மேடை போட்டு 3 நாள் விழா நிகழ்ச்சிகளை நடத்தினோம். அந்த கால கட்டத்தில் பிராமண சமூகத்தினர் மட்டுமே அங்கு அதிகமாக வசித்து வந்தார்கள். இப்போது நிலைமை மாறி விட்டது. கோவிலை மறைத்து மேடை போட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை செய்தார்கள். அந்த கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் செருப்பை அங்கேயே கழற்றி போட்டுவிட்டு உள்ளே செல்வது வழக்கமாக இருந்தது என மு.க.‌ஸ்டா‌‌லி‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கோவிலை மறைத்து மேடை போட்டதை சிலர் பிரச்சினையாக உருவாக்கிய போது தலைவர் கலைஞர், கிருஷ்ணரே ஸ்டாலின் கனவில் வந்து பேசி இருப்பார் அதனால்தான் ஸ்டாலின் அந்த இடத்தில் மேடை போட்டு இருக்கிறான் என்று பதில் அளித்தார் எ‌‌ன்று அமை‌ச்ச‌ர் கூ‌றினா‌ர்.

ஆக தலைவர் கலைஞர் அப்போதே ராமருக்கு எதிராக அறிக்கை விடவில்லை. அன்று மட்டும் அல்ல இப்போதும் அவர் ராமருக்கு எதிரி அல்ல என்பதை தெளிவு படுத்துவதற்காகத்தான் இதனை சொன்னேன். இன்றைக்கு மட்டும் அல்ல என்றைக்குமே அவர் யார் மனதையும் புண்படுத்தியது இல்லை எ‌ன மு.க.‌ஸ்டா‌லி‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சமீபத்தில் கூட ஒரு வார பத்திரிகையில் கலைஞரால் துணையில்லாமல் நடக்க முடியவில்லை அவர் ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டியது தானே என்று ஒருவர் எழுதி இருக்கிறார். முதல் அமைச்சரின் சிறந்த பணியால் அவர் அகில இந்திய அளவில் பேசப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத எரிச்சலில் அப்படி எழுதி இருக்கிறார்கள் எ‌ன்று அமை‌ச்‌ச‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் நமது தலைவர் கலைஞர். தள்ளாத வயதிலும் அவர் பாடுபடுவதற்கு காரணம் தமிழ்நாடு தள்ளாடி விடக்கூடாதே என்பதற்காக தான். அவரது பணிகளுக்கு இளைஞர் அணி துணை நிற்கும் எ‌ன அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்