''பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சமூக மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
பசும்பொன் தேவர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பிறந்த நாளான 30.10.2007க்கு முன்பு தென் மாவட்டங்களில் வாழ்கின்ற சில சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட குழு மோதல்களைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான சட்டப் பூர்வமான உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்படுமென்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற வழக்குகள் தவிர பிற வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள இந்த உத்தரவு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து சமூகத்தினரிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தின் அடையாளமாக இதனை எடுத்துக் கொண்டு அனைத்துத் தரப்பினரும் சமத்துவ நோக்குடன் ஒற்றுமையும் அமைதியும் காத்திட முன் வர வேண்டுமெனவும் முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.