புதுச்சேரி மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே அதிமுக, பாமக, புமுக ஆகிய கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபையை சபாநாயகர் காலவரையின்றி ஒத்திவைத்தார்.
புதுச்சேரி மாநிலத்தின் சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்ததும் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபால் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் வாசித்தார். இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், ஓமலிங்கம் ஆகியோர் கைககளில் பேனர்களை ஏந்தியபடி இருக்கைகளில் எழுந்து நின்றனர். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டதாகவும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஆனால் தொடர்ந்து கோஷம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாமக உறுப்பினர்கள் அனந்தராமன், அருள் முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு குறித்து பத்து நாட்களில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்பது குறித்து பேச வாய்ப்பு தர வேண்டும் என்று சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டனர்.
அவர்களை இருக்கைக்கு சென்று அமரும்படி சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு இருந்த பாமக எம்.எல்.ஏ.க்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் லட்சுமி நாராயணன், தளபதி, ஆனந்த் ஆகியோர், "இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக' கூறி சபாநாயகரை நோக்கி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து இருக்கையில் இருந்து எழுந்து நின்று கேள்விகளை எழுப்பியவாறும், கோஷமிட்டவாறும் இருந்ததால் அவையில் கூச்சல்குழப்பம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த புதுச்சேரி சட்டசபை கூட்டம் உறுப்பினர்களின் அமளியால் 9.40 மணிக்கு முடிவடைந்தது.