இந்து திருமணங்களை பதிவு செய்யாவிட்டால் அபராதம்: அரசு உத்தரவு!

Webdunia

புதன், 24 அக்டோபர் 2007 (10:32 IST)
தமிழகத்தில் அனைத்து இந்து மத திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் பதிவு செய்யாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்துமத அடிப்படையில் நடத்தப்படும் அனைத்துத் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு இந்து திருமண (பதிவு) சட்டத்தில் (1967-ம் ஆண்டு) திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.

அதன்படி, இந்து திருமணங்கள் அனைத்தையும் திருமண பதிவாளரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். திருமணம் நடந்து 3 மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்காக 2 விண்ணப்பங்கள் உள்ளன. அதில் புகைப்படத்துடன் கூடிய முதலாம் விண்ணப்பத்தை கணவன் அல்லது மனைவி பூர்த்தி செய்து திருமண பதிவாளரிடம் நேரில் வந்து கொடுக்க வேண்டும்.

திருமணத்தின் போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ மாப்பிள்ளை அல்லது பெண் தங்களது புகைப்படத்துடன் கூடிய 2-ம் விண்ணப்பத்தை கொடுத்து, திருமணத்தை பதிவு செய்யலாம்.

திருமணத்தை பதிவு செய்யாமல் இருந்தாலோ அல்லது தவறான விவரங்களைக் கொடுத்து திருமணத்தை பதிவு செய்தாலோ, கணவன்-மனைவி 2 பேரிடமும் அபராதம் வசூலிக்கப்படும். கோவில்களில் நடக்கும் திருமணங்களுக்கு ரூ.100 திருமண பதிவு கட்டணமாக வசூலிக்கப்படும் எ‌ன்று அரசிதழில் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்