சமூக சீர்திருத்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தேவையான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க பேராசிரியர் நன்னன் தலைமையில் சமூக சீர்திருத்த குழுவை முதலமைச்சர் கருணாநிதி அமைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2006-2007ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் "சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க, சமூகவியல் ஆர்வலர்களைக் கொண்ட நிரந்தரக் குழு ஒன்று உருவாக்கப்படும்'' என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு சமூகச் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதென்றும், பேராசிரியர் மா.நன்னன் இக்குழுவின் தலைவராகவும், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அருள் தந்தை வின்சென்ட் சின்னதுரை, வண்ணை தேவகி, திருப்பூர் அல்தாப், திருவாரூர் திருவிடம், பேராசிரியர் சுப.வீரப்பாண்டியன், எஸ்.வெங்கடேசன், பாசறை செல்வராஜ், ஜி.ராமகிருஷ்ணன், பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், கலி.பூங்குன்றன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், புதுக்கோட்டை விஜயா ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர் களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை முதலமைச்சர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.