மின் ஊழியர்களுக்கு 20% போனஸ்: அமைச்சர் அறிவிப்பு!
Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2007 (14:03 IST)
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்று மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மின்சார வாரிய ஊழியர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் (8.33 விழுக்காடு போனஸ், 11.67 விழுக்காடு கருணைத் தொகை)வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் 66,000 நிரந்தர ஊழியர்கள் பயனடைவார்கள். மேலும் சுமார் 21,600 ஒப்பந்தத் தொழிலாளர்கள், 3,465 பகுதி நேரத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் ரூ.1,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.
மத்திய அரசு அறிவித்துள்ள போனஸ் சட்டத் திருத்தத்தின்படி தனிநபர் போனஸ், கருணைத் தொகை 20 விழுக்காடாக இருக்கும் போது, அதிகபட்ச போனஸ் தொகையும் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 8,400 ஆக அதிகரிக்கும்.
இந்தக் கூடுதல் தொகை வட்டியில்லா முன்பணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதனால் மின்சார வாரியத்திற்கு இந்த ஆண்டு ரூ. 57.95 கோடி செலவாகும். 2 நாட்களுக்குள் போனஸ் தொகை வழக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.