ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆவடி, வண்டலூர், காஞ்சிபுரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என்று மத்திய ரெயில்வே இணை அமைச்சர் வேலு கூறினார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை மிகுந்த பகுதியாகும். இங்குள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தை ஏராளமான மக்கள் பார்த்து செல்கிறார்கள். அந்த அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து இணைப்பு ரெயில்வே பாதை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள் என்றார்.
இதில் மாநில அரசு பங்கு பெறும் நிலையில் இந்த திட்டம் சாத்தியமாகும் என்று நான் அறிவித்திருந்தேன். இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது என்று அமைச்சர் வேலு தெரிவித்தார்.
அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆவடியை இணைக்கும் ஒரு பாதையும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காஞ்சிபுரத்தை இணைக்கும் ஒரு பாதையும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரகடம் வழியாக சிங்கபெருமாள் கோவில் அல்லது வண்டலூருக்கு ஒரு பாதையும் அமைக்கப் படுகிறது என்றார் அமைச்சர் வேலு.
இதில் ஸ்ரீபெரும்புதூர் - ஆவடி ரெயில்வே பாதை 27.30 கிலோ மீட்டர் ஆகும். இதற்கான தற்போதைய திட்ட மதிப்பீடு ரூ.255 கோடி என்று அமைச்சர் வேலு தெரிவித்தார்.