சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நடத்தி வந்த வேலை நிறுத்தம் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா நடத்திய சமரச பேச்சுவார்த்தையின் பேரில் கைவிடப்பட்டது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற வழக்கறிஞர்கள் மீது அங்கு பணியிலிருந்த தலைமை காவலர் நடேசன் தாக்கியதாக கூறி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கடந்த 5ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், உயர் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. வழக்கறிஞர்களை தாக்கிய தலைமைக் காவலர் நடேசன் கைது செய்யக் கோரி சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், தசரா விடுமுறை முடிந்த பின்னர் இன்று உயர் நீதிமன்ற பணிகள் மீண்டும் தொடங்கியது.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்கனகராஜ், செயலாளர் மோகன கிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சந்தித்து போராட்டம் குறித்து பேசினர்.
அப்போது, இந்த பிரச்சனையை உயர் மட்ட குழுவின் விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக தலைமை நீதிபதி ஏ.பி.ஷா வழக்கறிஞர்களிடம் உறுதியளித்தார். போராட்டத்தை கைவிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக் குழு கூட்டப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவின் வேண்டுக்கோளை ஏற்று போராட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டதாக சங்க செயலாளர் மோகன கிருஷ்ணன் கூறினார்.