''வளர்ச்சிக்கு எதிரானவன் என்று தனக்கு முத்திரை குத்த படாதபாடுபடுகின்றனர்'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
பா.ம.க. சார்பில் 2020ல் தமிழகம் ஒரு தொலைநோக்கு திட்டம் என்ற திட்டத்தை அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்த தொலைநோக்கு திட்டத்தில் வறுமை ஒழிந்து வளம் கொழிக்கும் மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பதே எங்களின் கனவு. கனவு கண்டால் மட்டும் போதாது. அதை நனவாக்கும் வகையில் இந்தத் திட்டத்தில் பல கருத்துகளை வலியுறுத்தியுள்ளோம். இது வெற்று நோக்கம் அல்ல. தமிழகத்தில் நனவாகப் போகும் கனவு இது என்றார்.
என்னைப் பார்த்து எதற்கெடுத்தாலும் இவர் குறை சொல்வார். எதை அறிவித்தாலும் எதிர்த்துக் கொண்டே இருப்பார். இவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர் என்று முத்திரையை குத்த படாதபாடு படுகிறாரர்கள். அவர்களுக்கெல்லாம் நாங்கள் அளிக்கும் பதில் 2020 தொலைநோக்குத் திட்டத்தில் கூறியுள்ளோம் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை தமிழக மக்கள் முன்னால் ஆய்வுக்கும் முடிவுக்கும் வைக்கிறோம். இவற்றை தமிழக மக்கள் ஆராய்ந்து பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது. அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாவட்ட ஆட்சியர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் இத்திட்டத்தை அனுப்ப இருக்கிறோம் என மருத்துவர் ராமதாஸ் கூறினார்.
பள்ளிகளில் மட்டுமே செல்பேசி தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கல்லூரிகளிலும் செல்பேசி பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என் மருத்துவர் ராமதாஸ் வலியுத்தினார்.