தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட வரைவு இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேறியது.
தமிழகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு முறையே 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் அண்மையில் பிறப்பிக்கப்பட்டது.
இதனை சட்டபூர்வமாக்கும் சட்ட வரைவை சட்டசபையில் இன்று முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்தார். இச்சட்ட வரைவை டி.சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், ஜி.கே.மணி, பாலபாரதி, ராமசாமி, அப்துல் பாசித் ஆகிய அனைத்துக் கட்சிகளின் பேரவைத் தலைவர்களும் வரவேற்று பேசினர்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, “சமூக நீதிக்கான வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கக் கூடிய அளவுக்கு இந்த சட்டம் இன்று நிறைவேறுகிறது. பல ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றுபட்டு சமூக நீதிக்காக உழைப்போம்” என்றார். குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் அறிவித்தார்.