கோவை நகரின் கோட்டைமேடு பகுதியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது!
உக்கடத்திற்கு அருகில் உள்ள கோட்டைமேடு பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் அதிகம் பழமையான இந்த குடியிருப்பு பலவீனமாக இருந்த நிலையில், அதிலிருந்த 25க்கும் அதிகமான குடும்பத்தினர் எச்சரிக்கப்பட்டு பெரும்பாலானோர் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், தங்களுடைய வீட்டு சாமான்களை எடுக்க வந்தவர்கள் கட்டடத்தில் இருந்தபோது தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நேற்று 6 மணியளவில் சடசடவென்று அக்கட்டடம் இடிந்து கற்குவியல் போலானது.
இதில் சிக்கி உயிரிழந்தோரின் 12 பேரின் சடலங்கள் நேற்று இரவு வரை மீட்டெடுக்கப்பட்டது. இன்று காலை மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 9 வயது சிறுவன், 3 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 15 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கட்டடம் திடீரென்று அரை அடி ஆழத்திற்கு பூமிக்குள் இறங்கியதையடுத்து அதில் குடியிருந்தவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். பெரும்பாலானவர்கள் வெளியேறிவிட்ட நிலையில் இந்த விபத்து நடந்ததால் உயிரிழப்பு பெருமளவிற்கு தவிர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் உள்ள மற்ற குடிசைமாற்று வாரியம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் பலவீனமான கட்டடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகமும், கோவை மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளது.