கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பிரசாந்தும், அவருடைய மனைவி கிரகலட்சுமியும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் விவாகரத்து கேட்டு நடிகர் பிரசாந்த் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நடந்து வரும் வேளையில், கிரகலட்சுமிக்கும், நாராயண வேணு பிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதாக பிரசாந்த் கூறினார்.
இதைத்தொடர்ந்து, தனக்கும் கிரகலட்சுமிக்கும் இடையே நடந்த திருமணத்தை ரத்து செய்யும்படி நாராயண வேணுபிரசாத் என்பவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்தநிலையில், நீதிமன்றத்தில் கிரகலட்சுமி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் "எனக்கும் நாராயண வேணு பிரசாத்துக்கும் திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடந்ததாக போலி ஆவணம் தயாரித்து உள்ளனர். எனவே நாராயண வேணுபிரசாத் ரூ.1 கோடி நஷ்டஈடு தர வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது நாராயண வேணுபிரசாத் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "எனக்கும், கிரகலட்சுமிக்கும் திருமணம் நடந்தது உண்மை''. 1998ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்ட்ரல் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.