அ.தி.மு.க. உறுப்பினர் போஸ் நேற்று சட்டசபையில் காவலரின் தொப்பியை பறித்து சபாநாயகர் மீது வீசியது பற்றிய பிரச்சினையை அமைச்சர் துரைமுருகன் இன்று சபையில் எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், இந்த அவையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நேற்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் நடந்து கொண்டார்கள். அதில் ஒருவர் அவைக் காவலரின் தொப்பியை பறித்து சபாநாயகர் மீது வீசினார். அதற்கு என்ன நடவடிக்கை என்பதை இன்று அறிவிப்பதாக தெரிவித்தீர்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு அந்த தீர்ப்பு அமைய வேண்டும் என்றார்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்) கூறுகையில், சட்டசபையில் நேற்று நடந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. இந்த சம்பவம் சபாநாயகர் பதவியை அவமதிப்பது போன்றது ஆகும். எதிர்காலத்தில் இப்படி ஏற்படாத வகையில் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
ஜி.கே.மணி (பா.ம.க.) பேசுகையில், ஜனநாயகத்தை மதிக்கும் இந்த ஆட்சியில் ஜனநாயக மரபுகளை அவமானப்படுத்தும் வகையில் நேற்று நடந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு விளக்கம் அளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், பழைய முன் உதாரணங்களை வைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சுட்டிக் காட்டினார்கள். அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். அறவே அந்த உறுப்பினரை நீக்க வேண்டும் என்ற கடினமான தீர்மானம் வேண்டுமா, என யோசிக்க வேண்டும்'' எனவே அந்த சபை இறையாண்மையை காக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தாலே போதும் என்றார்.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில், அ.தி.மு.க.வினர் நேற்று செய்த கூச்சல், குழப்பம் அனைத்தையும் இந்த நாட்டு மக்கள் அறிந்தனர். பேரவை தலைவரையே களங்கப்படுத்தும் வகையில் பேரவையின் இறையாண்மைக்கு களங்கம் ஏற்படும் வகையில் உறுப்பினர் போஸ் தொப்பி எடுத்து வீசியிருக்கிறார். இதற்கு தண்டனை கொடுக்காவிட்டால் சபையின் தரம் தாழ்ந்து விடும். எனவே உறுப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு விளக்கமாக கூறினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை முன்மொழியு மாறு அவை முன்னவரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து அவை முன்னவர் அமைச்சர் அன்பழகன், உறுப்பினர் போஸ் மீது நடவடிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், சட்டமன்ற உரிமைகளையும், மாண்பினையும் நிலை நாட்டும் கடமை நம் எல்லோருக்கும் உள்ளது. இந்த அவை மரபை காப்பாற்ற உறுப்பினர் போஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கேட்டுக் கொண்டனர்.
அவர் உறுப்பினராக இருக்கவே அருகதை அற்றவராக கருத வேண்டியுள்ளது. முதலில் ஆறு மாதம் போசை நீக்கி வைக்க முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. முதலமைச்சர் கேட்டுக் கொண்டதால் 6 மாதம் என்பதை குறைத்து அடுத்த சட்டசபை தொடர் தொடங்கி முதல் 10 நாட்கள் வரை போசை நீக்கி வைக்க அவை முடிவு செய்துள்ளது. இதன்படி அவர் சட்டமன்ற உறுப்பினருக்கு உரிய எந்த ஆதாயமும் பெற முடியாது. இடைப்பட்ட காலத்தில் அவருக்கு உரிய ஊதியம், சலுகை உள்ளிட்டவைகளை பெற முடியாது என்று அமைச்சர் அன்பழகன் கூறினார்.