வாய்மொழியாக குறிப்பிட்ட பத்திரிகைகள் மீது உரிமை மீறல் கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை வலியுறுத்த விரும்பவில்லை. ஆனால் கடந்த ஆட்சியில் ஜெயலலிதா சொன்ன கருத்து ஏற்கப்பட்டு, உரிமைப் பிரச்சினைகள் அவை உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது போலவே, இப்போதும் நான் அளித்துள்ள உரிமைப் பிரச்சினையும் அவை உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
“சட்டசபையில் இது பற்றி 110 வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில், பத்திரிகைகள் மீதும், தொலைக் காட்சிகள் மீதும் உரிமைப் பிரச்சினை கொண்டு வருவது என்பது அ.தி.மு.க. ஆட்சியில் நடை பெற்றுள்ளது என்ற போதிலும், அது தி.மு.க.வின் கொள்கைக்கு விரோதமானது என்று கழகத் தலைமை அறிவுறுத்தியதின் பேரில், நான் நேற்றைய தினம் அவையில் வாய்மொழியாக அந்தப் பத்திரிகைகள் மீது உரிமை மீறல் கொண்டு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை வலியுறுத்த விரும்பவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என ஸ்டாலின் கூறினார்.
கடந்த ஆட்சியில் இன்றைய முதலமைச்சர் கலைஞர் மீது பல உரிமைப் பிரச்சினைகள் அவர் வெளியிலே முரசொலியிலே எழுதியதற்காகவும், பேசியதற்காகவும் கொண்டு வரப்பட்ட செய்திகள் எல்லாம் அவைக் குறிப்பிலே இடம் பெற்றுள்ளன என்று அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
28-9-2005 அன்று இன்றைய முதலமைச்சர் கலைஞர் மீது ஒரு உரிமைப் பிரச்சினை கொண்டு வரப்பட்ட போது, அன்றைய முதல் அமைச்சர், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா என்ன கூறினார் தெரியுமா? என்பதை அமைச்சர் கீழே விளக்கியுள்ளார்.
"இந்த அவையின் உறுப்பினராக இருக்கின்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஏதாவது கருத்து தெரிவிப்பதாக இருந்தால், துணை மானியக் கோரிக்கையின் மீது கருத்து தெரிவிக்க விரும்பினால், இந்த அவைக்கு வந்து, தெரிவிக்க வேண்டுமே தவிர, அவைக்கு வெளியே தெரிவிப்பது, அவதூறாக கருத்து தெரிவிப்பது என்பது உரிமை மீறல் என்ற பிரச்சினையைத் தான் இங்கே கொண்டு வருகிறார்கள்.''
"இப்போது நான் முதலமைச்சராக இருக்கிறேன். எனக்கும் எல்லா விதமான உரிமைகளும் உண்டு. ஆனால், இந்த அவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏதாவது அறிவிப்பு செய்ய விரும்பினால், கருத்துக் கூற விரும்பினால், இந்த அவைக்கு வந்துதான் நான் தெரிவிக்க வேண்டுமே தவிர, வெளியிலே தன்னிச்சையாக நான் கட்டுரை எழுதி வெளியிட முடியாது. வெளியே தன்னிச்சையாக நான் பேட்டி கொடுக்க முடியாது '' இவ்வாறு அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது முதல் அமைச்சராக இருந்தவரும், இன்றைய தினம் எதிர்க் கட்சித் தலைவராக இருப்பவருமான ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கள் இன்றும் அவைக் குறிப்புகளிலே இடம் பெற்றுள்ளன என்பதைத் மு.க.ஸ்டானின் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் அந்தக் கருத்து ஏற்கப்பட்டு, உரிமைப் பிரச்சினைகள் அவை உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது போலவே, இப்போதும் நான் அளித்துள்ள உரிமைப் பிரச்சினையும் அவை உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு விடையாக அளித்திட விரும்புகிறேன் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.